இந்த தளத்தைப் பார்வையிடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... என்றும் குமார்..

Saturday, December 21, 2013

உ. சகாயம்

உ. சகாயம்
Sahyamias.JPG
பிறப்பு புதுக்கோட்டை, தமிழ்நாடு
தொழில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி
உ. சகாயம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தவர். தாம் பணியாற்றிய மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளாலும் நேர்மையான அணுகுமுறைகளாலும் மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டவர்.


பிறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தைச் சார்ந்த உபகாரம் பிள்ளை - சவேரி அம்மாள் தம்பதியினரின் ஐந்து மகன்களில் கடைசியாக பிறந்தவர்.

படிப்பு

பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் புகழ்பெற்ற லயோலா கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பு (சமூகத் தொண்டு), சட்டப்படிப்பு என அடுத்தடுத்து தன் கல்வித் தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார்.

குடும்பம்

இல்லத்தரசியின் பெயர் விமலா. அருள் திலீபன் என்ற மகனும், யாழ் என்ற மகளும் உள்ளனர்.

பதவிகள்

தர்மபுரியில் பயிற்சி ஆட்சியர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், கோட்ட வளர்ச்சி அதிகாரி, திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் கோட்ட வளர்ச்சி அதிகாரி, திருச்சி உணவு பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர், கோவை ஆயப்பிரிவு துணை ஆணையாளர், சென்னை, மாவட்ட வருவாய் அதிகாரி, தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநிலத் தேர்தல் ஆணையச் செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் ஆகிய பணிகளை வகித்துள்ள இவர் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தார். தற்பொழுது இவர் கோஆப்டக்ஸ் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

குறிப்பிடத்தக்க செயல்கள்

  • கூடலூர், கோட்ட வளர்ச்சி அதிகாரியாக இருந்த போது அவரது அறையில் “If you have power, use it for the poor” - உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து. என்கிற வாசகங்களை எழுதி வைத்திருந்தார்.
  • காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ.வாக இருந்த போது பெப்சி குளிர்பானத்தில் அழுக்குப்படலம் இருந்ததாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து ஆதாரங்களைத் திரட்டி அந்த ஆலைக்கு பூட்டு பூட்டினார்.
  • நாமக்கல், மாவட்ட ஆட்சியராக இருந்த போது, இவரது சொத்துக்கள் விவரத்தை அரசின் இணையதளம் மூலம் வெளியிட்டு பரபரப்பேற்படுத்தினார்.(மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் இந்திய ஆயுள் காப்பீடுக் கழக வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனத்தின் கடனுதவித் திட்டம் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு , வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி என்பது இங்கு குறிப்பிடக்கூடியது.)
  • மதுரை மாவட்ட ஆட்சியராக மதுரை மாவட்டத்தில் 2011 சட்டமன்ற தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வழி செய்தார். இவரது அறையில் “லஞ்சம் தவிர்த்து. நெஞ்சம் நிமிர்த்து” என்கிற வாசகம் காணப்பட்டது.
  • நாமக்கல்லில் ஆட்சியராக இருந்த போதும், பிறகு மதுரையிலும் தொடுவானம் என்ற இணைய வலைப்பூ வாயிலாக பொது மக்கள் தங்களுக்கான புகாரை நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பும் வழிவகை செய்திருக்கிறார். கிராமங்களில் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளித்து இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வந்திருக்கிறார்.
  • மதுரையில் ஆட்சியராக இருந்த போது அங்கே ஏதிலியர் முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழர்களுக்காக தையல் பயிற்சி அளித்து தையல் வேலை வாய்ப்பு, மற்றும் கணினி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதே போல ஊனமுற்றவர்களுக்கு ‘ஊன்று கோல் திட்டம்’, உழவர்களுக்காக ‘உழவன் உணவகம்’ திட்டம் ஆகியவற்றையும் சிறப்புற செயல்படுத்தினார்.
  • கோ-ஆப்டெக்ஸில் கடந்த ஆண்டு பொது விநியோகத்திற்கு வழங்கப்பட்ட இலவச வேட்டி சேலைகளின் முத்திரைகளை அழித்து அவற்றை மீண்டும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு விற்க முயன்ற ஜவுளி உற்பத்தி ஆலையின் ஊழலை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளார். 

பரிசுகள் / விருதுகள்

  • 2011-ம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான மூன்றாவது பரிசினை தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா வழங்கினார்சிறந்த ஆட்சியர் பரிசு

எதிர்ப்புகள்

  • சகாயம் நாமக்கல்லில் ஆட்சியராக இருந்த போது அப்போதைய தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் தி.மு.க.வின் வி.பி.துரைசாமி ஒரு இதழுக்கு சகாயத்தைப் பற்றி எதிர்மறையாகப் பேட்டி அளித்தார். இதனை எதிர்த்து சகாயம் துரைசாமி மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
  • மே 24, 2012 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து விடுவித்து கோஆப்டக்ஸ் நிர்வாக இயக்குனராக பணி மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

No comments: