
தியாக வேங்கையே! திரட்டு உன் வரிப்புலி கூட்டத்தை!!
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உன் உரிமை மீட்பிற்காக வருகிற
30.8.2013 அன்று நடத்தவிருக்கும் மாபெரும் மறியல் போருக்கு உன் வரிப்புலி
கூட்டத்தை திரட்டி விட்டாயா?. திட்டமிட்ட செயல் கெட்டுப்போனதாக வரலாறு
இல்லை. தமது திட்டம் நாளைய வெற்றியின் படிக்கல். மறந்த போன நினைவுகளை!
மழுங்கி போன உணர்வுகளை!! தட்டி எழுப்பி தன்மானமுள்ள தியாக வேங்கையாக
போருக்கு புறப்பட தயாராகயிரு. உனது வெற்றி முரசு சத்தம் சக ஆசிரிய சகோதரனை
தட்டி எழுப்பும் சங்கொலியாக அமையட்டும். உனக்கு இந்த ஒரு மாத காலத்தில்
10க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். அனைத்தையும் உன் சக
ஆசிரியனிடம் பகிர்ந்தாயா?. அடடா! எத்தனை விமர்சனங்கள். அந்த
விமர்சனங்கள்தான் என்னை கூர் தீட்டின. இன்று பெறவில்லையென்றால் என்று
பெறப்போகிறோம்? நீண்ட இரயில் பயணத்தில் பயணிகளை பத்திரமாக சேருமிடம்
சேர்க்கும் தொடர் வண்டி போல் தமிழக ஆசிரியர்களை பாதிப்புக்களின்றி பயணிக்க
செய்கின்ற தொடர் வண்டிதான் டி.என.பி.டி.எப். ஆகஸ்டு புரட்சி இந்திய
வரலாற்றில் இன்றளவும் பேசப்படுகிறது. அதை போலத்தான் நமது ஆகஸ்ட் மறியல்
இயக்க வரலற்றில் பேசப்படும். ஆள்பவர்களுக்கும், ஆண்டு முடித்தவர்களுக்கும்
சேதாரம் இல்லாமல் போரடுவது போல் பாசாங்கு செய்ய தெரியாது நமக்கு. நெஞ்சில்
மூண்ட நெருப்புக்கு சமரசம் ஏதுமில்லை என்ற இலட்சிய வேட்கையை நெஞ்சில் ஏந்தி
வெற்றி கிட்டும் வரை போராட மட்டுமே நமக்கு தெரியும். தங்கம் செய்யாததை
தங்கம் செய்யும் என்பதில் உறுதியுள்ளவன் நான். ஆகத்து-30 இலட்சியவாதிகள்
சங்கமிக்கும் நாள். ஆளும் அரசின் மனதை மாற்றப்போகும் நாள். மற்றவர்கள்
துணிந்து செய்யாததை துணிச்சலுடன் எதிர்கொள்வதே எமது இயக்கத்தின் வழக்கம்.
இது நமக்கான பாதிப்பு. நாம் திரட்டவில்லையென்றால் யாரால் இயலும்? நாம்
திரட்டுகின்ற கூட்டம் எதிர் கால ஆசிரிய சமுதாயத்தின் இயல்பு வாழ்க்கைக்கு
இடக்கூடிய அடி உரம். கூட்டு போராட்டம் சாத்தியப்படவில்லையா? என்ற வினாவினை
பலர் தொடுத்து வருகிறீர்கள். அதற்கான முயற்சியை நமது தலைமை செவ்வனே செய்து
வருகிறது. நாம் தலைமையேற்கவும் தயார் அல்லது மற்ற தலைமையோடு
கூட்டுச்சேர்ந்து களம் காணவும் தயார் என்பதே நமது தலைமையின் நிலை. எனவே
இயக்கம் இட்ட கட்டளையை நிறைவேற்ற பல போராட்ட களம் கண்ட தியாக வேங்கைகளே
திரட்டு உன் படைகளை. நம் பலம் என்ன என்பதை மற்றவர்களுக்கு புரியவைப்போம்.
போராட்ட களம் ஒன்றும் நமக்கு புதிதல்ல. புரட்சிகரமான கோஷங்களால் புது
வரலாறு படைப்போம். குள்ள நரி கூட்டங்களை நம் கூட்டம் கூண்டோடு
விரட்டட்டும். நம்மை எள்ளி நகையாடுபவர்கள் நடுங்கி ஓடட்டும். நல்லவர்கள்
கூட்டம் நம்மோடு இணையட்டும். களத்தை சூடுபடுத்தி இலட்சிய வேட்கையுடன்
மறியல் செய்ய அழைத்து வா! உன் வரவை ஆவலுட்ன எதிர்பார்க்கிறேன். இரண்டு அம்ச
கோரிக்கை வெல்வதற்குத்தான் நமது மாநில முதல்வர் கூட இரண்டு விரல்
காட்டகிறார் போல்? நேரம் இரவு 12 ஆகிவிட்டது நாளை மாவட்டம் முழுவதும்
அனைத்து வட்டாரத்திற்கும் சுற்று பயணம் திட்டமிட்டுள்ளோம். வட்டார
நிர்வாகிகளை சந்தித்து உற்சாகப்படுத்த நாளை நேரில் உன்னை நோக்கி எமது
பயணம். தோழனே வாழ்வாதாரத்ததை மீட்டெடுக்க உன் வரி-புலி கூட்டத்தை
திரட்டிடுக. வெற்றி நமதே!
கூட்டுப்போராட்டம் - சாத்தியப்படுமா?
இன்றைய சூழ்நிலையில் கூட்டுப்போராட்டம்தான் நம் துயர் துடைக்க சரியான பாதை
என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த காலங்களில் 7 இயக்கங்கள்
ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவில் அங்கம் வகித்தன. மூன்று நபர் குழு
அறிக்கைக்கு பின்னர் வெளிவந்த அரசானைணளில் இடைநிலை ஆசிரியர்கள்
திட்டமிட்டே வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிந்த உடன் அரசாணைகள்
வெளிவந்த அன்றே தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார தலைநகங்களிலும்
தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தை நடத்தி தமிழக அரசிற்கு தனது எதிர்ப்பை
முதலாவதாகவும், மிகவும் கடுமையாகவும் பதிவு செய்தது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி. அதன் பின்னரும் டிட்டோ - ஜேக் இயக்கத்தில் உள்ள
எந்தவொரு அமைப்பும் கூட்டு நடவடிக்கை மூலம் இந்த அநீதியை எதிரப்போம் என்று
குரல் கொடுக்கவில்லை. மற்ற இயக்கங்கள் செய்ய மறந்த, செய்ய மறுத்த பல
விசயங்களை தன் ஆக்ரோஷமான இயக்க நடவடிக்கைகளால் டி.என.பி.டி.எப். செய்து
முடித்து வெற்றி கண்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் கடந்த 18ந் தேதி தனது
தலைமை அலுவலகத்திற்கு கூட்டு நடவடிக்கை குறித்து விவாதிக்க டிட்டோ-ஜேக்கில்
அங்கம் வகிக்கும் 7 சங்க தலைமைக்கும் எமது பொதுச்செயலாளர் மூலம் அழைப்பு
கடிதம் அனுப்பப்பட்டது. இதன் பின்னாலும் இயக்க தலைமையால் தொலைபேசியிலும்
அழைக்கப்பட்டனர். அதன் பின்னர் 18ந் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கூட்டு
நடவடிக்கையில் அங்கம் வகித்த சில இயக்கங்கள் பங்கேற்கவில்லை. அவர்கள்
பங்கேற்காத காரணங்கள் குறித்து நாம் அலச போவதில்லை. அதனால் சில தேவையில்லாத
சச்சரவுகளே வலம் வரும். நாம் வேண்டுவதெல்லாம் என்ன காரணத்தால் கூட்டு
நடவடிக்கை மேற்கொள்ள தயக்கம். தயங்குவதால் தரத்தில் தாழ்வு நிலைக்கு தரம்
தாழ்ந்து போகப்போவது இடைநிலை ஆசிரியர்கள்தான். ஒரு வேளை தமிழ்நாடு
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அழைத்து நாம் போவதா? என்ற ஈகோ மற்ற
இயக்கங்களுக்கு இருந்தால் டிட்டோ-ஜேக் என்ற பதாகையின் கீழ் ஒன்று சேர்ந்து
போராட நமக்கு அழைப்பு விடட்டும். எங்கள் தலைமைக்கு ஈகோவெல்லாம் கிடையாது.
எங்களுக்கு கோரிக்கைதான் முக்கியம். கோரிக்கையின் தீவிரம் அறிந்து போராட
எமது அமைப்பு தயாராகவே உள்ளது. அதற்கான வேண்டுகோளை எங்களால் எங்கள்
தலைமைக்கு வைக்க முடியும். எங்கள் வேண்டுகோளை எங்கள் தலைமை நிச்சயம்
ஏற்கும். அதற்கான உறுதியை எங்களால் தர இயலும். எமது வேண்டுகோள் மற்ற சகோதர
இயக்கங்களை சார்ந்த தோழர்களும் தங்கள் தலைமைகளை ஏன்
கூட்டுப்போராட்டத்திற்கு செல்ல மறுக்கிறீர்கள் என்று வினா தொடுத்து
அவர்களையும் கூட்டு இயக்க நடவடிக்கைக்கு உட்படுத்துவதற்கு முயற்சி செய்ய
வேண்டும். 18.8.2013 அன்று டி;டோ-ஜேக் அமைப்பில் உள்ள அனைத்து இயக்கஙகளும்
ஒன்று சேர்ந்திருந்தால் 30.8.2013 டிட்டோ-ஜேக் மாவட்ட மறியலாகவும்,
25.9.2013 மாநில மறியலாகவும் போராட்ட களம் தயார் படுத்தப்பட்டிருக்கும்.
தனிச்சங்க நடவடிக்கை என்பது பலம்பொருந்திய தனி மெஜாரிட்டி உள்ள ஆளும் அரசை
அசைத்து பார்க்க இயலுமா? நாம் ஒன்று சேர்ந்து அசைத்தால் அம்மா அசைந்தே ஆக
வேண்டும். அசைப்பதற்கு ஏன் இந்த தயக்கம். கோரிக்கை வென்றெடுத்தால்
தம்மால்தான் வென்றெடுக்கப்பட்டது என்று தமது இயக்க வரலாற்றில் பதிவு செய்ய
முயலும் இயக்கஙகள் கூட்டு வெற்றியை கொண்டாட மறுப்பது ஏன்? நெஞ்சில் மூண்ட
நெருப்பிற்கு சமரசம் ஏதும் இல்லை என்ற இலட்சிய வேட்கையை எம் நெஞ்சில்
நிறுத்தி போராட்ட களம் காணும் எங்களால் பொறுக்க இயலவில்லை. மற்ற
இயக்கத்தினை குறை கூற இதை பதிவிட வில்லை. எமது ஆற்றாமையை, ஏக்கத்தை
வெளிப்படுத்தவே விரும்புகிறோம். இது எமது சொந்த கருத்தே. எப்பாடுபட்டாவது
இயக்கங்களை ஒன்றினைத்து வெற்றி கனியை பறித்து விட மாட்டோமா? என்ற அவாவே
காரணம். ஆகவே தேழனே இடைநிலை ஆசிரியனின் இன்னல் தீர்க்க கூட்டு
போராட்டத்திற்கு வித்திடுவோம். காலம் கடந்து எடுக்கப்படும் முடிவு
விழலுக்கு இரைத்த நீராக அமைந்து விடும். இயக்க தலைமைகளை நிர்பந்திப்போம்.
இன்னல் தீர்க்க இணைந்து போராடுவோம். நீ முடிவெடுத்தால் அனைத்தும்
சாத்தியமே!.
தோழா! கலைக்கப்பட்டுள்ளதா உன் தூக்கம்?
தோழா! கலைக்கப்பட்டுள்ளதா உன் தூக்கம்? இல்லை தூங்குவது போல் பாசாங்கு
செய்கிறாயா? ஒரு இனத்தின் தரத்தை தரமிடப்போகின்ற நேரத்தில் உனக்கு உறக்கமா?
தரமில்லாமல் தாழ்ந்து போன உன் விடியலுக்காக ஆகஸ்ட் - 30 இயக்கம் நடத்தும்
மாபெரும் மறியலில் இயக்கம் கடந்து சங்கமிப்போம் - சாதித்து காட்டுவோம்.
சாதிக்க துடிக்கும் இளைஞர் பட்டாளம் நிறைந்தது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி கோட்டை. போர் முரசு கொட்டி பகை விரட்டி, கோரிக்கைகள்
வெற்றி பெற தோழனே உடனே புறப்படு. பகல் முழுதும் ஆசிரியர் சந்திப்பு, இரவு
திட்டமிடல் எளிதான வெற்றியின் சூத்திரம். தர்மம் தன்னை சூது கவ்வும்.
இறுதியில் தர்மமே வெல்லும். தர்மம் வெல்ல புறப்படும் படை இது. யார்
தடுத்தாலும் நிற்காது. ஆகத்து -25ல் குற்றால மாநில செயற்குழுவில் நமது
பிரச்சனைகள் விரிவாக ஆலோசிக்கப்படும். போராட்ட களம் பல கண்ட நமக்கு சொல்லி
தெரிவதில்லை. களத்தை சூடுபடுத்து. பாதிப்பை அறியாத பாவப்பட்ட ஆசிரிய இனத்தை
தட்டி எழுப்பு. பிறர் எழுப்புவார் என்று இருந்து விடாதே1 மற்றவர்களை பற்றி
கவலை கொள்ளாமல் உன் இயக்க பணியை மேற்கொள். இந்தியா சுதந்திரம் அடைந்த இந்த
மாதமே நமக்கும் விடியல் ஏற்படடுட்டும். ஆகஸ்ட்-30 அணி அணியாய் திரள்வோம்.
ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவோம். ஒவ்வொரு ஊதியக்குழுவிலும்
ஒப்பாரி வைத்தே நம் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளது. இப்பொழுதும் ஒப்பாரி
வைப்போம். நமக்கு ஏற்பட்ட அநீதிகளை நாடறியும் வகையில் ஒப்பாரி வைப்போம்.
நமது ஒப்பாரி உரிமைக்கான ஒப்பாரி. தலைமை அறிவித்துள்ள போராட்ட வியூகங்களை
முறையாக கடைப்பிடித்து உரிமையை மீட்போம். உரிமைக்கு உரத்த குரல்
கொடுக்கவில்லையென்றால் நம்மை உதவாக்கரைகள் என்று வரலாறு பேசும். நாம்
பிறக்கும் பொழுதே போராட்ட குணத்துடன் பிறந்தவர்கள். உதிக்கும்பொழுதே
போராட்டத்தில குதித்த ஒரே இயக்கம். போராடுவதற்கும், போராட்டத்திற்கு
அழைப்பதற்கும் தகுதியும், திராணியும் நம்மிடம் நிறையவே உண்டு. மனம் சோராமல்
மடை திறந்த வெள்ளம் போல் மடமடவென மறியலில் குதிப்போம். மறியல் ஒன்றே நமது
நிலயை மாற்றும். நம் நிலை உயரும் வரை போராட்டத்தை கைவிடோம் என சபதம
ஏற்போம். நெஞ்சில் மூண்ட நெருப்பிற்கு சமரசம் ஏதுமில்லை என்ற பதாகையை
உயர்த்தி பிடிப்போம். மஞ்சள் கொடியால் மாவட்டத்தை நிரப்புவோம். மறியலில்
உன் போராட்ட வீச்சினை மற்றவர்களும் கடைப்பிடிக்கட்டும்.
ஆகவே யார் ஒதுங்கினாலும் நம் வீரப் போராட்டம் நமக்கு நிச்சயம் வெற்றியைக் கொடுக்கும்!
வாழ்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி!
வெல்க நம் மறியல் போராட்டம்!
கூட்டுப்போராட்டத்திற்கு வேட்டு வைப்பதா?
கூட்டு போராட்டத்திற்கு கூவி கூவி நாம அழைத்தால் அதை பகிராமல் சில தோழர்கள்
பங்காளி சண்டைக்கு வரிந்து கட்டிக்கொண்டடு முக நூலில் பதிவுகள் இடுவது
எரிச்சலை ஏற்படுத்துகிறது. பாவபப்பட்ட ஆசிரியன் வாழ்வாதரத்திற்கு
போராடும்பொழுது வாரிசு சண்டையில் நான் துரோகியா? நீ துரோகியா? என்ற பட்டி
மன்றம் நடக்குது. துரோகம் யார் செய்தாலும் அவரவர் மன நிலைக்கே
விட்டுவிடுவோம். இனி நடக்கப்போவதை நல்லதாகவே நினைப்போம். அனைவரையும்
அரவனைத்து செல்வதுதான் கூட்டு போராட்டத்தின் வெற்றியாக அமையும். கடந்த கால
நினைவுகளை அசை போடுவதால் தர்ம சங்கட்டமே மிஞ்சும். ஒரு பக்கம் இயக்க
தலைமைகளுக்கிடையில் ஈகோ. மற்ற பக்கத்தில் இயக்க பொறுப்பாளர்களிடம்
கருத்துமோதல்கள். இடையில் நசுங்குவது என்னவோ இடைநிலை ஆசிரியனின்
கோரிக்கைகள்தான். தனிச்சங்க நடவடிக்கை ஒரு புறம் இருந்தாலும் கூட்டு
நடவடிக்கையே நாம் முன்னெடுக்க வேண்டும். தேவையில்லாத கருத்துக்களை
பதிவிடுவதால் தேவையற்ற பின்னூட்டங்கள் ஒற்றுமைக்கு உலை வைத்துவிடும்.
கூட்டுப்போராட்டத்திற்கு சங்க தலைமைகளை வலியுறுத்துவதை விட்டுவிட்டு
பங்காளி சண்டையிடுவதால் பயன் என்ன? என்பதை நண்பர்கள் சிந்திக்க வேண்டும்.
முகநூலில் வரும் பதிவுகள் அனைத்திற்கும் பின்னூட்டம் இட வேண்டிய அவசியமோ,
அவசரமோ இல்லை. பின்னூட்டம் இடாததால் மற்றவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை
என்றாகி விடாது. கடந்த கால வரலாறு அனைவரும் அறிந்ததே. அதை அம்பலத்தில்
ஏற்றுவதால் ஆகிய பயன் என்ன? சொல்லிய சொல்லும், எழுதிய எழுத்தும்
மீட்டெடுக்க இயலாது. எண்ணிக்கையில் அதிகம் இருக்கின்ற ஒரே காரணத்திற்காக
தன்னுடைய உரிமைகளை இழந்து நிற்கின்ற பரிதாபத்துக்குறிய அறிவூட்டிகளின்
நிலையை கருத்தில்கொண்டு கருத்து மோதல்களுக்கு முற்றுபுள்ளி வைப்போம்.
காரியம் கைகூட கைகோர்ப்போம். நம் கை இனைந்தால் கரம் வலுக்கும். கரம்
வலுத்தால் காரியம் தானகவே முடியும். அதை விட்டுவிட்டு கீழ்த்தரமான
விமர்சனங்களை பதிவிட்டு ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதை தவிர்ப்போம். சக
ஆசிரியனை சகோதரராக ஏற்போம். சங்கம் வளர்ப்பது முக்கியமல்ல. சாதனை
படைப்பதுதான் முக்கியம். ஒன்று கூடி எழுப்பப்போகும் கோஷங்கள் உரிமையை
மீட்டெடுக்கும் வெற்றி ஓசையாக அமையட்டும். டிட்டோஜாக் அமைப்பை மீண்டும்
கட்டமைப்போம். இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம். இயக்கம் பாராமல் இணைவோம்.
தொடர்ந்து வெளியிடப்படும் பதிவுகளை மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்து களம்
சூடு மாறாமல் பாதுகாப்போம். இறுதி வெற்றி நமதே!!!
உண்மைகள் - கசக்கும்
நேற்று ஆசிரியர் இயக்க பணிகளில் தீவிரமாக உள்ள மாற்று இயக்க நண்பர்
ஒருவருக்கு சுதந்திர தின வாழ்த்து பரிமாறிக் கொண்டேன். அப்பொழுது நண்பர்
இந்த தலைவர்கள் திருந்த மாட்டார்கள் போலும். மேடையில் ஒன்றும் செயலில்
ஒன்றும் செய்து நம்மை குழப்பி விடுகிறார்கள் என்றார். கூட்டு சங்க
நடவடிக்கை கோரிக்கை வலுத்து வரும் நிலையில் சில சங்கங்கள் வாய் மூடி மவுனம்
காப்பது என்பது இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நீர்த்து போகச்செய்யும்
தந்திரம் என்றார். அடுத்து அவர் கூறியது நம்மை மிகவும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை
வென்றெடுத்துக் கொடுத்தால் தற்பொழுது பணியில் சேர்ந்தவர்கள் நம்மை மதிக்க
மாட்டார்கள் எனவும், கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பது போல் கொடுத்து
ஊடகங்களில் செய்தி வெளியிடுவதன் மூலம் இடைநிலை ஆசிரியர்களை நம் பிடியில்
தொடர்ந்து நிலை நிறுத்தவும், தொடர்ந்து தலைமை பதவிகளில் சுகம் காணவும் சில
தலைமைகள் திட்டம் தீட்டியுள்ளதாகவும் நம்மிடம் தெரிவித்தார். அதனால்தான்
கூட்டு போராட்டத்திற்கு வராமல் கடந்த கூட்டுப்போராட்ட வரலாறுகளை தம்
உறுப்பினர்களிடம் திரித்து கூறி தவறான சிந்தனையை அவர்களின் மனதில் பதிய
வைப்பதாகவும் கூறினார். இந்த விசயங்களை நம்மால் நம்பவும் முடியவில்லை.
நடக்கிற நிகழ்வுகளை பார்த்தால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவர் எந்த
இயக்கத்தில் இந்த மாதிரி நிகழ்வுகள் என்பதை கூற மறுத்துவிட்டார். நாம் அதை
நம்ப இயலாத நிலையில்தான் உள்ளோம். இன்றைய அரசியல் சூழ்நிலையில் கூட்டு
நடவடிக்கை என்பது பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கை வென்றெடுக்க
வேண்டும் என்ற பொதுநல சிந்தனையின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்க
வேண்டும் மற்ற காழ்புணர்ச்சிகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என நாம் தொடர்ந்து
வலியுறுத்தி வருகிறோம். இது மற்ற சங்கங்களை குறை கூற பதிவிடவில்லை. இதை
படிக்கின்ற ஆசிரியர் பெருமக்கள் எந்த இயக்கமாக இருந்தாலும் தாம்
சார்ந்துள்ள இயக்க தலைமைகளை கூட்டு போராட்டத்திற்கு வலியுறுத்துவதன் மூலம்
அரசாங்கம் நமது கோரிக்கையின் மீது கவனம் செலுத்த வழி பிறக்கும். ஆசிரியர்
சங்கங்களுக்கிடையில் நான் பெரியவன், நீ பெரியவன் என சண்டையிட்டு கொள்வதன்
மூலம் கடைசியில் பாதிக்கப்படுவது இடைநிலையாசிரியர்கள்தான். நாமெல்லாம் ஒரே
தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள்தான். ஒன்றுபட்ட இயக்கமாக இருந்து, சில
பல காரணங்களுக்காக நமக்கு விருப்பப்பட்ட இடங்களில் வாழ்கின்றோம். அதற்காக
சகோதர உணர்வு மழுங்கி போய் விடுமா என்ன?. நாம் நம்மை நாமே தூற்றிக்கொண்டு
மாறி மாறி வசை பாடுவதை சில நண்பர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு
தூற்றிக்கொள்வதால் நமது தலைமைகளுக்கு அது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி
விடும். தலைவர்கள் என்ன முடிவெடுத்து கட்டளை இடுகிறார்களோ இதை
சிரமேற்கொண்டு செயலாற்ற தோழனே தயாராக இரு. நிச்சயம் தலைவர்களிடம் இருந்து
நல்ல முடிவை எதிர்பார்க்கும் சக தோழனாக நானும் இருக்கிறேன். என்னதான்
இருந்தாலும் போராட்டங்களில் இடைநிலை ஆசிரியரின் பங்களிப்பு என்பது
சொல்லிக்கிறது மாதிரி இல்லை. எந்த போராட்டத்திற்கும் வராமல் முதல் ஆளாக
ஏ.டி.எம். இயந்திரங்களை நோக்கி ஓடி எவனோ போராடி பெற்ற பணபலன்களை
அனுபவிக்கும் உணர்ச்சியற்ற உயிராய் இருப்பதை மாற்றிக்கொள். ஒரு புழு கூட
கால் பட்டால் தன் தலை தூக்கி தன் எதிர்ப்பை பதிவு பண்ணுகிறது. ஓரறிவு
படைத்த உயிரினத்திற்கே இந்த ரோஷம் என்றால் நமக்கு? சிந்தித்து பார். இயக்க
பொறுப்பாளர்களுக்கும் குடும்பம் உண்டு. இயக்க பொறுப்பேற்றதற்காக தன் சுக
துக்கங்களில் பங்கெடுக்காமல் இந்த ஆசிரியர் சமுதாயத்திற்காக தன் வாழ் நாளை
செலவிடுகின்றான். அறிஞர் அண்ணாவையும் அவரது கொள்கைகளையும் மறந்த திராவிட
கட்சிகளைப்போல சில ஆசிரியர் இயக்கங்கள் மாஸ்டர் இராமுண்ணியின் கொள்கைகள்
மறந்துவிட்டன. எது எப்படி இருந்தாலும் கூட்டுப்போராட்டமே நம் துயர்
துடைக்கும். இந்த பதிவு யார் மனதையும் காயப்படுத்தும் நோக்கில்
வெளியிடப்படவில்லை. யாரையும் காயப்படுத்தினால் வருந்துகிறோம். சில உண்மைகள்
கசக்கதான் செய்யும். குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. ஒன்று படுவோம்!
வென்றெடுப்போம்!!!
இதுவரைநாம்பெற்றவெற்றிகளெல்லாம்
யாருடைய கருணையினாலும்
தயவினாலும் அல்ல.
நம்முடைய ஒற்றுமையால்...
போராட்டங்களால்...
தியாகங்களால்...
நன்றி:
தோழமையுடன்.........
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டத்தலைவர்,
சிவகங்கை மாவட்டம்.
No comments:
Post a Comment